
பாரம்பரியமாக மூதாதையர்கள் வழிபட்ட தெய்வத்தை தொடர்ந்து வழிவழியாக வழிபடுவது தான் குலதெய்வ வழிபாடு. எத்தனை தெய்வங்களின் துணை இருந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பது இல்லாவிட்டால் நிம்மதியில்லாத வாழ்க்கையே கிடைக்கும். குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியான குறையில்லாத வாழ்க்கை கிட்டிவிடுவதில்லை. ஆனால் வாழ்க்கை முழுவது கஷ்டத்தை மட்டுமே ஒருவன் கொண்டிருக்க பல காரணங்கள் சொல்வதுண்டு. சில நேரங்களில் அவன் ஜாதகத்தில் கிரகங்கள் படும் பாடு என்று கூட சொல்வதுண்டு. ஆனால் கிரகங்களின் தாக்கம் எப்படி இருந்தாலும் எவன் ஒருவன் குலதெய்வத்தை காலங்காலமாக விடாமல் வழிபடுகிறானோ அவனை எந்த கிரகமும் தோஷமும் எதுவும் செய்யமுடியாது. ஏனெனில் குலதெய்வம் அத்தனை இடர்களையும் போக்கி காப்பாற்றகூடியது.
குலதெய்வம் என்று அழைக்க காரணமே பாரம்பரியமாக அவர்களது மூதாதையர்கள் வழிபட்ட தெய்வத்தை தொடர்ந்து வழிவழியாக வணங்குவதால் வந்த பெயர்தான். அதனால் தான் வீட்டில் பெரியவர்கள் குலதெய்வத்தை வணங்கும் போது தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து வழிபடுவார்கள்.
இஷ்ட தெய்வம் அல்லாமல் சிறுதெய்வமாக இருந்தாலும் கூட குலதெய்வம் தான் ஒருவருக்கு மிகவும் சக்திவாய்ந்தது. அதனால் தான் வீட்டில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும், நல்ல நிகழ்வுகள் இருந்தாலும் அதற்காக குலதெய்வத்தின் அனுமதியை பெற்று நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பூஜையை யாருக்கு செய்தாலும் ஏன் கிரகநிலை சரிசெய்யமுடியும் என்று கிரகங்களின் அதிபதிக்கு செய்யும் பரிகாரபூஜைகளும், வழிபாடுகளும் அவர்களை முழுமையாக சென்று சேர வேண்டும் என்றால் அது குலதெய்வத்தின் ஒப்புதலோடுதன் நடக்க வேண்டும். குலதெய்வத்தை வழிபடாத பூஜைகள் எவ்வித பலனையும் தராது. அதை உணர்த்தவே கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்று பேச்சு வழக்கில் சொல்வதை கேட்டிருப்போம்.
அறிந்தும் அறியாமலும் ஒருவன் செய்த பாப புண்ணியங்கள் ஏழேழு பிறவிக்கும் தொடரும் என்பது நம்ப்பிக்கை. ஆனால் குலதெய்வத்தின் கருணைபார்வை அவன் மீது இருந்தால் குலதெய்வம் அந்த பாவ புண்ணியத்தின் கணக்கை குறைத்துவிடும். அதுவே ஆண்டவன் கணக்கு ப்படி கர்மாவை அதிகம் வைத்திருப்பவனுக்கு குலதெய்வம் தெரியாமல் போகும் விதியும் ஆண்டவன் விதித்திருப்பான்.
குலதெய்வம் என்பது பாரம்பரியமாக வாழ்ந்த ஊரில் இருக்கும் தெய்வம். தொழில் ,பணி, கல்வி என்று வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. வருடம் ஒரு முறையேனும் குல தெய்வ கோயிலில் பொங்கலிட்டு படையல் செய்து பூஜை செய்ய வேண்டும். ஆனால் பலரும் இடம் மாறிய நிலையில் குலதெய்வம் அறியாமல் அல்லது கோயிலை நேரில் சென்று வழிபட முடியாத நிலையில் உள்ளார்கள்.
குடும்பத்தில் மிக கடுமையான சோதனையின் போது ஜோதிடரை பார்க்கும் போது அவர் குலதெய்வ வழிபாடு தான் தீர்வு என்பார். அப்போது தான் குலதெய்வம் குறித்த நினைவுக்கு வரும். குலதெய்வம் தெரிந்தவர்கள் வருடம் ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு செல்வது நல்லது. பொதுவாக குலதெய்வத்தை சித்திரை முதல் நாளிலும், பெளர்ணமி நாட்களிலும் தரிசனம் செய்தால் நல்லது என்று சொல்வார்கள்.
பூஜையறையில் எப்போதும் இஷ்ட தெய்வத்தின் படம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதனோடு குலதெய்வத்தின் படமும் வைத்து வணங்க வேண்டும். எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பு உங்கள் குலதெய்வத்தை வேண்டி பிறகு உங்கள் இஷ்ட தெய்வங்களை தொடங்குங்கள் அது உங்களையும் உங்கள் அடுத்த சந்ததியினரையும் குலம் போல் தழைத்து வாழவைக்கும். குலதெய்வம் இல்லாத வழிபாடு எந்த வகையிலும் பயன் அளிக்காது. குலதெய்வத்தின் மனத்தை குளிரவைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள்
