
சோழபுரம் என்னும் கிராமம் செல்வ செழிப்பு மிக்கது.
இதில் பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்தவர் பாண்டுதாசன். மன்னரின் அவையில் பொற்கொல்லராக இருந்த இவர் தொழிலில் திறமைசாலி என்றாலும் கூட யாராவது விட்டலா.. பாண்டுரங்கா…என்று சொன்னால் போதும் அவர்கள் பின்னால் இவரும் விட்டலா.. விட்டலா என்று ஓடிவிடுவார். பிறகு எப்போது நினைவு திரும்புகிறதோ அப்போதுதான் திரும்புவார். இதனால் மன்னரது கோபத்துக்கும் அவ்வபோது ஆளானார்.
ஒருமுறை மன்னர் தன் மகளது திருமணத்துக்காக பொன், நவரத்தின மணிகள் சேர்த்து அழகான மாலையை விரைவில் செய்து கொடுக்கும் படி கட்டளையிட்டிருந்தார். நீங்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக இதை செய்துவிடலாம் என்ற திரிலோசனதாசரை புன்சிரிப்புடன் கவனித்தாரோ என்னவோ எம்பெருமான். வேலை சிந்தனையோடு வீட்டுக்கு வந்தவர் பின்னாலேயே பாண்டுரங்கனின் லீலைகளைப் பாடிய பஜனை கோஷ்டி ஒன்று இவரது வீட்டுக்கு அருகில் வந்தது.
விட்டலா.. விட்டலா என்று விடாமல் பாண்டுரங்கனைப் பாடிய பஜனை பொற்கொல்லருக்கு இனிமையாக இருந்தது. அவர்கள் பின்னால் சென்றவர் இரண்டு நாட்கள் அவர்களுடனே இருந்தார். ஆயிற்று மன்னர் கொடுத்த கெடு முடிவடைய போகுதே என்ற கவலையில் வேலையில் மூழ்க ஆரம்பித்தார். ஆனால் பாண்டுரங்கனின் நினைவுகளால் மும்முரமாக வேலை செய்யமுடியவில்லை. மன்னர் சொன்ன நாள் வந்தது. இவரை காணாததால் மன்னர் அரண்மனை காவலாளிகளை அனுப்பினார். அவர்களிடம் இன்னும் இரண்டு நாட்களில் முடிப்பதாக சொல்லி அனுப்பினார்.
இப்படியே நாட்களை கடத்தினார். வேலையில் ஈடுபடும்போதெல்லாம் விட்டானா பாண்டுரங்கன். மனம் முழுக்க நிரம்பியபடி வேலையில் மூழ்கவைத்தான். ஏற்கனவே அரசன் எச்சரித்த நிலையில் இன்று அரண்மனை காவலர்கள் வருவார்களே என்று பயத்தில் இருந்த திரிலோசனதாச காட்டை நோக்கி கிளம்பி விட்டார். அங்கு பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி தியானம் செய்ய தொடங்கினார். கணவரைக் காணாமல் மனைவி தவிக்க… இவர் பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ண லீலைகளைப் பாடியபடி ஆனந்தமாக காலத்தைப் போக்கினார். அரண்மனை காவலர்கள் இவரை தேடிகொண்டிருந்தனர்.
இதற்குமேலுமா பக்தரை சோதிப்பது, பாண்டுரங்கனே பொற்கொல்லர் வேடம் தரித்து வீட்டுக்கு வந்து மன்னர் மகளுக்காக மாலை செய்ய தொடங்கினார். விட்டலின் கை வண்ணத்தில் மாலை அற்புதமாக மின்னியது. உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நுணுக்கமான வேலைப்பாட்டுடன் மினுமினுத்தது. இறைவனின் கைவண்ணத்தில் உருவானதாயிற்றே குறை சொல்ல இயலுமா.. மன்னர் முதல் மாளிகையில் இருந்தவர்கள் வரை அனைவரும் பாராட்டினார்கள். மன்னர் பாராட்டி பரிசுகளை தந்து அனுப்பினர். பொற்கொல்லர் வடிவில் இருந்த பாண்டுரங்கன் வீட்டுக்கு வந்து பொன்னும் பொருளும் கொடுத்து இன்று அதிகம் சமை. வீட்டுக்கு அடியார்கள் பலரும் வருவார்கள் என்று கூறினார்.
அன்று அடியார்கள் வந்து பசியாறி வாழ்த்தி சென்றனர். பொற்கொல்லன் வேடம் இட்ட இறைவன், அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு உணவை பொட்டலமாக எடுத்துக்கொண்டு காட்டில் இருந்த பாண்டுதாசரிடம் வந்தார். ஐயா தங்களைப் பார்த்தால் பசியால் வாடுபவர் போல் இருக்கிறது. இந்த நாட்டின் மன்னரது மகள் திருமணத்துக்காக பொற்கொல்லர் செய்து தந்த மாலையால் மகிழ்ந்த மன்னன் பொற்கொல்லனுக்கு பொன்னை அள்ளிக்கொடுத்தார். அவர்கள் வீட்டில் இறையடியார்களுக்கு விருந்துபசாரம் நடந்தது. அப்படி கொண்டு வந்த உணவு உங்களுக்கு தேவை போல் இருக்கிறது என்றார்.
நடந்ததை அறிந்துகொள்ள வீட்டிற்கு வந்தவர் கண்ணில் வீடு முழுவதும் இருந்த பொருள்கள் கண்ணில் பட்டது. தனது மனைவியிடம் ஏது இவ்வளவு பொருள்கள் என்று வினவினார். நீங்கள்தானே உங்கள் கைவண்ண மாலை நன்றாக இருப்பதாக மன்னர் கூறி பரிசளித்தார் என்று இவற்றையெல்லாம் வாங்கி வந்தீர்கள். அதோடு இன்று அடியார்களுக்கும் அமுது பரிமாறினீர்களே என்றார். நானா என்ற திரிலோசனதாசர் மனக்கண்ணில் அமுது கொண்டுவந்த அடியார் முகமும் பாண்டுரங்கன் முகமும் வந்ததும் வந்தது பாண்டுரங்கனே என்று முடிவு செய்தார்.
ஓட்டமும் நடையுமாக திண்ணைக்கு வந்து பார்த்தார். அவருடன் வந்த அடியார் சுவடு தெரியாமல் மறைந்திருந்தார். விட்டலா…பண்டரிநாதா, உன் .பக்தன் பித்துப்பிடித்து போனானே என்று பின்னாலே வந்து காப்பாற்றினாயா? என் துன்பம் கண்டு சகியாமல் ஆபத்பாந்தவனாய் என்னை மீட்டுவிட்டாயே என்று கதறி அழுதார். துன்பங்களும் இன்பங்களும் எப்போதும் நம்மை சுற்றி இருக்கும் தான். ஆனால் விட்டலனை நம்பினால் விடாமல் காப்பாற்றுவானே!
