பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கஞ்சி, ஜூஸ் போன்றவற்றைக் கொடுக்கும்போது அதில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கும் பழக்கம் பல அம்மாக்களிடம் உள்ளது. சிலர் குழந்தைகளுக்கு பால் சாதம் ஊட்டும்போதும் சர்க்கரை சேர்ப்பார்கள். “சர்க்கரை நல்லது இல்லையே?” என்று கேட்டால், “இனிப்பாக இருந்தால்தான் குழந்தை சாப்பிடுகிறது” என்று சிலர் கூறுவார்கள்.
குழந்தை வளர வளர சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக் போன்ற இனிப்புகள் நிறைந்த உணவுப் பொருட்களை அடிக்கடி கொடுக்கும் பெற்றோர்கள் இந்தக் கட்டுரையை கவனமாகப் படிக்க வேண்டும்.
அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது குழந்தைகளுக்கு பல் சொத்தையை ஏற்படுத்தும் என்பது நீண்ட காலமாக நாம் அறிந்த விஷயம். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளுதல் உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருப்பதோடு, எதிர்காலத்தில் தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases) ஏற்படும் அபாயத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. இதில் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்றவை அடங்கும்.
சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரை மட்டுமா?
சர்க்கரை என்றால் சமையலறையில் நாம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையை மட்டும் குறிக்கவில்லை. உணவுகளில் மற்றும் பானங்களில் சேர்க்கப்படும் Free Sugars எனப்படும் சர்க்கரைகளும் இதில் அடங்கும். குழந்தைகள் உட்கொள்ளும் இலவச சர்க்கரையின் அளவு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
கர்ப்பம் தொடங்கிய காலம் முதல் குழந்தையின் முதல் இரண்டு வயது வரையிலான காலம், குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்ப்பது நீண்ட கால உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றும் சில இடங்களில் குழந்தை பிறந்த உடனேயே சர்க்கரை நீரைத் தொட்டு குழந்தையின் வாயில் வைக்கும் பழக்கம் காணப்படுகிறது. அதேபோல், குழந்தைகளுக்கு பழங்களை ஜூஸாகக் கொடுக்கும்போது கூடுதல் சர்க்கரை சேர்க்கும் வழக்கமும் உள்ளது. குழந்தையின் உணவில் தேவையற்ற கூடுதல் சர்க்கரையை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்ல உணவுப் பழக்கத்தை உருவாக்க உதவும்.
முதல் 1000 நாட்கள் ஏன் முக்கியம்?
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற சர்க்கரைப் பங்கீட்டு முறையின் முடிவால் ஏற்பட்ட மாற்றத்தைப் பயன்படுத்தி, குழந்தைப் பருவத்தில் சர்க்கரை உட்கொள்ளுதலுக்கும் பிற்கால உடல்நலத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவுகளின்படி, சர்க்கரைப் பங்கீட்டு முறை முடிவுக்கு வந்த பின்னர் குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளும் அளவு கணிசமாக அதிகரித்தது. இதன் மூலம் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் சர்க்கரை உட்கொள்ளும் அளவுக்கும், பிற்காலத்தில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்னைகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தியவர்களுக்கு, வாழ்நாளில் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் சுமார் 35% வரையும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் சுமார் 20% வரையும் குறைந்திருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC12799378/ என்னும் ஆய்வு கட்டுரையில் நீண்ட கால சர்க்கரை கட்டுப்பாடு வயது அதிகரிக்கும் போது ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் நுரையீரல் நார்ப்பெருக்கம் (Pulmonary Fibrosis) போன்ற சில சுவாச நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் மூலம், குழந்தைப் பருவத்திலேயே சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது எதிர்கால உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
இந்தியாவில் ஏன் முக்கியம்?
இந்தியாவில் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உருவாக்குவது முக்கியத்துவம் பெறுகிறது.
குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்பதற்காக ஒவ்வொரு உணவிலும் கூடுதல் சர்க்கரை சேர்ப்பது அவசியமில்லை. குழந்தையின் உணவில் தேவையற்ற Free Sugar-ஐக் குறைப்பது, சிறு வயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கலாம்.
குழந்தையின் முதல் 1000 நாட்கள் என்பது அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமான காலகட்டம். எனவே, இந்தக் காலத்தில் குழந்தைக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களில் கூடுதல் சர்க்கரையின் அளவு குறித்து பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
நீரிழிவின் தலைநகராக இந்தியா மாறிவரும் நிலையில் இந்த தடுப்பு நடவடிக்கையை உடனடியாக செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகள்




