
குய்லின் பார் சிண்ட்ரோம் என்றால் என்ன?
இது ஒரு அரிய வகையான தன்னுடல் தாக்க நிலையாகும்.. இதில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பினால் உடலில் உள்ள புற நரம்புகளை தாக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்றவைகளால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் சிகிச்சையினால் சிலர் முழுமையாகவும் குணமடைகின்றனர்.
யாருக்கெல்லாம் இந்த சிண்ட்ரோம் உருவாகுகிறது?
இது எந்த வயதினரையும் தாக்கலாம். குறிப்பாக 30 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குகிறது. மேலும் உலகில் வருடந்தோறும் 1,00,000 மக்களுக்கு இந்த நோய் கண்டறியப்படுகிறது. அதாவது 78,000 பேரில் ஒருவருக்கு வருடந்தோரும் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
குய்லின் பார் சிண்ட்ரோம் அறிகுறிகள்:
நமது தசை இயக்கம், வலி உணர்வு, தொடு உணர்தல் மற்றும் வெப்பநிலையைக் கண்ட்ரோல் செய்வது உடலில் உள்ள புற நரம்புகளாகும். இது தொடர்பான பிரச்னைகளையே இந்த சிண்ட்ரோம் கொடுக்கிறது.
முதலாவதாக, உடலின் தசை பலவீனமடையும் அல்லது கூச்ச உணர்வுகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் திடீரென்று தோன்றும் மேலும், முதலில் கால்கள் மற்றும் பாதங்களில் தொடங்கி உடல் முழுவதும் பரவத் தொடங்கும். தசை பலவீனம் அடைந்தால் படி ஏறுவது அல்லது நடப்பதிலுமே சிரமமாக இருக்கும்.
இதன் வீரியம் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும். அதன் வீரியத்திற்கு அறிகுறிகளும் இருக்கும். அதில்,
கால்கள், பின்புறத்தில் தசை வலி
கால்கள், முகத்தில் உள்ள தசைகள் மற்றும் கைகளில் பக்கவாதம் ஏற்படுவது. வீரியம் அதிகமானால், முழு பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மார்பு பகுதிகளில் உள்ள தசைகள் பலவீனமடைந்தால் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படும். மூன்றில் ஒருவருக்கு இந்த அறிகுறிகள் தென்படுகிறது.
பேசுவது மற்றும் உணவு போன்றவற்றை விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
கண்கள் மற்றும் பார்வையில் பிரச்னைகள் தோன்றும்.
இந்த குய்லின் பார் சிண்ட்ரோமினால் ஏற்படும் அறிகுறிகள் நேரம், நாட்கள் அல்லது சில வாரம் என நீடிக்கலாம். சிலருக்கு முதல் இரு வாரங்களிலிலேயே மிகவும் மோசமான பலவீன நிலையை அடைகின்றனர். 90% நோயாளிகள் அவர்களது மூன்றாவது வாரத்தில் இன்னும் பலவீனம் அடைகிறார்கள்,
திடீர் தசை பலவீனம் ஏற்படுவது மற்றும் சில நேரங்கள் மற்றும் நாட்களில் தீவிரமடைந்தால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
குய்லின் பார் சிண்ட்ரோமினால் வரும் சிக்கல்கள் என்ன?
இந்த நோயினால் தன்னியக்க நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் மிகவும் மோசமான சிக்கல்கள் உண்டாகிறது. தன்னியக்க நரம்புகள் உடலில் பல தானியங்கி இயக்கங்களை இயக்குகிறது. அதாவது இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் செரிமான இயக்கம் போன்றவைகள் பாதிப்படையும். இதை டிஸ் ஆட்டோநோமியா என்பார்கள், (dysautonomia)
இதில், கார்டியாக் அர்த்மியா, நிலையற்ற இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, சிறுநீர்ப்பை கட்டுபாடு, மற்றும் சிறுநீர் தக்கவைத்தல் போன்ற அறிகுறிகளும் உள்ளடங்கும்.