
சாயி என்று மனதார ஒருமுறை நினைத்தால் நமக்கு ஏதோ ஒரு ரூபத்தில் பாபா காட்சியளிக்கிறார். தன்னை மனதார நினைத்து வேண்டுவொருக்கு தான் எப்போதும் விலகுவதில்லை என்பது எம்பெருமானின் சத்திய வாக்குகளில் ஒன்று. சாயி என்ற பெயர் எப்படி பாபாவிற்கு வந்தது என்பதே இந்தப் பதிவு.
மஹாராஷ்டிராவின் அவுரங்கபாத்தில் ஒரு சிறிய கிராமம் அது. சந்த் பாய் என்பவர் அக்கிராமத்தின் பட்டேல். பட்டேல் செல்வ செழிப்புடன் இருந்தார். ஒருநாள் அவரின் குதிரை ஒன்று காணாமல் போய்விட்டது. மனதுக்கு மிகவும் பிடித்தமான குதிரை என்பதால் அதை அப்படியே விட்டு விடாமல் தேடி சென்றார்.
ஊரின் எல்லா பகுதிகளிலும் தேடினார். வெகு தூரம் தேடியும் குதிரை எங்கும் புலப்படவில்லை. மனமுடைந்து போன பட்டேலின் கண்ணுக்கு நமது பக்கிரி ஒரு மாமரத்துக்கடியில் அமர்ந்து இருப்பது தெரிந்தது.எம்பெருமான் எப்போதும் கந்தலான உடை மற்றும் தொப்பி அணிவதாலே பக்கிரி என்றும் கூறப்பட்டார். கையில் ஒரு சிறிய தடியும் வைத்திருப்பார்.
குதிரை மீது உட்கார பயன்படுத்தும் சேணம் சந்த் பாயின் கையில் இருப்பதை பார்த்து விவரத்தை அறிந்தார். தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் கூறியவற்றை கேட்ட பின் அருகில் இருக்கும் காட்டில் இன்னொரு முறை குதிரையை தேடிப் பார்க்க சொல்லி மெல்ல எழுந்து நடக்கலானார்.
இவ்வளவு தூரம் தேடியும் கிடைக்கவில்லை, அதேபோல் பெரியவர் சொன்னதையும் பட்டேலால் நிராகரிக்க முடியவில்லை. இரண்டு மனதோடு அருகில் இருக்கும் காட்டை நோக்கி நடந்தார். என்ன ஒரு அதிசயம்! குதிரை அங்கே இருப்பதைக் கண்டவுடன் பட்டேலுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்பு தான் சந்தித்தது சாதாரண மனிதர் அல்ல என்பதை உணர்ந்து இன்னும் கண்ணீர் வடித்தார். உடனே பாபாவை சந்தித்து தனது நன்றியைக் கூறி அவரது விருந்தோம்பலை ஏற்க வீட்டிற்கு அழைத்தார்.
சிறிது நாட்களுக்கு பிறகு சந்த் பாயின் வீட்டு திருமணம் ஷீர்டியில் இருக்கும் கந்தோபா கோயிலில் நடந்தது. இத்திருமணத்தில் பாபாவும் கலந்துக் கொண்டார். அப்போது அவரை வரவேற்க பட்டேல் ஓடிச்சென்று “சாயி உன்னை வரவேற்கிறேன்” என்றுக் கூற அருகில் இருப்பவர்களும் அவ்வாறே அழைத்தனர். இப்படியே நமது பாபாவிற்கு சாயி என்ற பெயர் வந்து சாய் பாபா என்றானது.
தன்னை நாடி வந்தவரின் துன்பத்தை போக்குவேன் – இது பாபாவின் சத்திய வாக்கு. அவரை நம்பி சரணடைந்தோர்களுக்கு இந்த வாக்கை காப்பாற்றி வருவதில் எம்பெருமான் சிறிதும் தயங்குவதில்லை.
சாயி சரணம்!!