
சொந்த வீடு வாங்க வேண்டும் என்னும் கனவு எல்லோருக்கும் உண்டு என்றாலும் உடனே கை கூடிவிடுவதில்லை. குடும்பம், குழந்தை, வீடு மூன்றுமே இறைவனின் அருளால் மட்டுமே பெற முடியும் என்பார்கள் பெரியோர்கள். அது உண்மையும் கூட. வீடு என்பது நான்கு சுவர்களினால் ஆனதல்ல. தெய்வ கடாட்சம் நிறைந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் இணைந்த அன்பு நிறைந்த இடம். இதை முழுமையாக பெற விரும்பினால் நீங்கள் அடைய வேண்டிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகனை தான். இங்கு வந்து வழிபட்டவர்களுக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்றித்தந்துள்ளார் இங்குள்ள பாலசுப்ரமணியன்.
சிறுவாபுரி தலச்சிறப்பு என்ன?
சிறுவாபுரி கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலை உடையது. மயில் மரகதக்கல்லால் இருப்பது விசேஷம். அதே போன்று பாலசுப்ரமணிய சுவாமி, ஆதிமூலவர், நவக்கிரக விக்கிரகங்கள் தவிர மற்ற தெய்வங்கள் இங்கு மரகதக்கல்லால் ஆனவை. மூலவர் பாலசுப்ரமணியர் நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே அருணகிரிநாதர் சன்னிதி உண்டு. முருகனுக்கு வலதுப்பக்கத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்பாள் சன்னிதி உண்டு. இவர்களுக்கு நடுவில் முருகப்பெருமான் வள்ளி உடன் கைகோர்த்து திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த பாலசுப்ரமணீயனை அருணகிரிநாதர் சிறப்புற புகழ்ந்து பாடியிருக்கிறார்.
சிறுவாபுரி தலவரலாறு
சிறுவராகி இருவர் கரிபதாதி கொசுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர் என்னும் திருப்புகழ் பாடல் மூலம் சிறுவாபுரியின் சிறப்பை அறியலாம். ராமாயண காலத்தில் நடந்த வரலாற்று செய்தி இது.
ராமன் பட்டாபிஷேகம் முடிந்து கர்ப்பிணி மனைவியான சீதையை காட்டிற்கு அனுப்பிய நிலையில் சீதைக்கு லவ, குசா என்னும் மகன்கள் பிறந்தனர். மனைவி இன்றி அஸ்வமேத யாகம் செய்ய முடியாமல் யாக குதிரையை பல நாடுகளுக்கு அனுப்ப அப்படி வந்த குதிரையை லவ, குசா இருவரும் பிடித்து வைத்துகொண்டதாகவும். அதை தேடி வந்த இராமனுடன் இந்த சிறுவர்கள் சண்டையிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. சிறுவர்கள் சண்டையிட்டதால் சிறுவர்+ அம்பு+ எடு என்பது சின்னம்பேடு ஆனது.
இந்த சிறுவர்கள் வலம் வந்த இடம் சிறுவர்கள் புரி என்றும் பிற்காலத்தில் மருவி சிறுவாபுரி ஆயிற்று.
மற்றொரு சிறப்பாக முருகம்மையார் என்னும் முருக பக்தை முருகனையே நினைத்திருந்ததால் அவர் கற்பின் மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர் முருகம்மையின் கையை துண்டித்தார். முருகம்மைக்கு காட்சி தந்து அருள்பாலித்த முருகர் வெட்டிய கையை ஒன்று சேர்த்தார்.
சிறுவாபுரி தலம் சென்றுவந்தால் என்ன சிறப்பு?
சொந்த வீடு கனவு இருப்பவர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று என தொடர்ந்து ஆறு வாரங்கள் இங்கு வந்து முருகனை தரிசித்து வேண்டிகொண்டால கனவு இல்லம் நனவாகும்.
முருகன் இங்கு வந்து வள்ளியை திருமணம் செய்து திருமண கோலத்தில் அருள்பாலிப்பதால் நீண்ட காலம் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து முருகனை மனதார வேண்டினால் மிகச்சிறந்த மணவாழ்க்கை அமையும்.
சிறுவாபுரி முருகன் கோயில் எங்குள்ளது?
சிறுவாபுரி முருகன். சென்னை கோயம்பேட்டிலிருந்து 40 கி.மீட்டர் தொலைவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
சிறுவாபுரி கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி , மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.