
தை மாதம் என்றாலே பொங்கலுக்கு அடுத்து வரும் முக்கிய தினங்களில் ஒன்று தை அமாவாசை. பித்ரு தோஷங்கள் வராமலிருக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் இந்நாளில் புனித நீரில் மக்கள் நீராடுவார்கள். மூதாதையர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் பரிபூரண ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் எப்போது வழிப்பட வேண்டும் மற்றும் வழிப்பாட்டும் முறைகளை இதில் பார்க்கலாம்.
திரேத யுகம் மற்றும் கிரதயுகங்களில் முன்னோர்களே நேரிலே வந்து நாம் கொடுக்கும் உணவுகளையும், வழிப்பாட்டையும் ஏற்றுக் கொள்வர். இந்த யுகங்களில் தர்மம் தழைத்து ஓங்கியதால் இந்த நிலை இருந்ததாகவும், துவாபார யுகம் மற்றும் கலியுகத்தில் அதர்மம் ஓங்கியுள்ளதால் பித்ருக்கள் நமது கண்களுக்கு தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
எப்போது வழிபடலாம்?
இந்த ஆண்டில் ஜனவரி 29ம் தேதி புதன்கிழமையில் வருகிறது. ஜனவரி 28ம் தேய்ஜி இரவு 8.10 மணிக்கு திதி தொடங்கி, மறுநாள் இரவு 7.21 வரை அமாவாசை திதி உள்ளது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் இது கூடுதல் சிறப்பாகும்.
அமாவாசை என்பது சந்திரனுக்கு உகந்தது. தர்ப்பணம் செய்யும் அந்தணர்களுக்கு பச்சரிசி, பச்சை காய்கறிகள், துணிமணிகள் ஆகியவற்றைக் கொடுப்பதால் நாம் நமது மூதாதையர்களுக்கு செய்யும் அனைத்துமே சேரும் என்பது நம்பிக்கை.
சனிபகவானின் அருள்பெறுவதற்கு:
சனிதிசை நடப்பவர்களுக்கும் சனிபகவானின் அருட்பார்வை பெறுவதற்கும் இன்று தானம் கொடுக்கலாம். உணவு அளிப்பது, போர்வை, குடை, காலணிகளை கொடுப்பதும் நல்லது. மேலும், சனிபகவானுக்கு உகந்த நல்லெண்ணய் தீபம் வழிபாட்டும், எள்ளு தானமும் கொடுப்பதால் சனி பகவானின் ஆதிக்கம் நல்வழியில் வலுப்படும்.
என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
உத்தராயணப் புண்ணியக் காலத்தில் வரும் தை அமாவாசையில் புனித நீர்நிலைகள், தீர்த்தங்கள் அல்லது கடற்கரையில் நீராடலாம். அக்னி தீர்த்தம் உள்ள இடங்கலான இராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், திருவையாறு, முக்கொம்பு முதலிய தலங்களில் ஓடும் பஞ்ச நதிக்கரைகள் பிதுர்களுக்கு உரிய பூஜைக்களுக்கு போற்றப்படுகின்றன. மேலும், இந்நாளில் கேளிக்கை மற்றும் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இதனால் இவை உகந்த நாளல்ல என்றுக் கிடையாது.
