இறைவன் நாமத்தைச் சொன்னால் என்ன கிடைக்கும்? துக்காராம் சொல்லும் பக்தியின் மகிமை
- by Neela Vijayakumar
- Oct 7, 2026
- 20 Mins
கோயிலுக்குப் போக முடியவில்லை. அதனால் தான் சதா சர்வகாலமும் இறை நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறோம். இறைவழிபாடு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்காமல், சதா சர்வகாலமும் ராமா... ராமா... சிவா... சிவா... கோவிந்தா... கோவிந்தா என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எல்லாமே இறைவனின் திருநாமம்தான்.
பகவானின் திருநாமத்தை உச்சரித்தால் என்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் புராணக் காலத்துக் கதை.
துக்காராம் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். இவர் உணவு உண்ணும் நேரத்தைத் தவிர, கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று சொல்லிக்கொண்டே இருப்பார். பார்ப்பவர்களிடமும், “கிருஷ்ணா என்று சொல்லுங்கள்... விட்டலா என்று சொல்லுங்கள்... பாண்டுரங்கா என்று சொல்லுங்கள்” என்று சொல்லி வற்புறுத்துவார்.
சில நேரங்களில், “எப்போதும் இதே புராணம் பாடுகிறாரே... இவருக்கு இதைத் தவிர வேறு எதுவும் பேசத் தெரியாதா?” என்று சிலர் சலித்துக்கொள்வார்கள். “உங்களை அந்தக் கிருஷ்ணன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று யாராவது சலிப்புடன் சொன்னால், துக்காராம் சட்டென்று சிரிப்பார்.
காரணம் புரியாமல் மற்றவர்கள் விழித்தால், “பார்த்தீர்களா... இப்போது கூட ‘கிருஷ்ணன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லிவிட்டீர்கள். இதைத்தானே நானும் சொல்கிறேன்!” என்று அவர்களை அசடு வழிய வைப்பார்.
பேசியவர்கள் வாயடைத்துப் போவார்கள். “ஓ... இவர் சொல்வதுபோல் கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறதே” என்று இறுதியில் கிருஷ்ணரை அழைப்பார்கள். அல்லது வானத்தைப் பார்த்தபடி, “விட்டலா!” என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்.
வெளியிலேயே இப்படி என்றால் வீட்டில் சும்மாவா இருப்பார்? துக்காராம் வீட்டில் வேலை செய்யும் வாசுகி என்ற பணிப்பெண், அவருடைய ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டே இருப்பாள்.
“சதா சர்வகாலமும் கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே... அப்படி என்னதான் கிருஷ்ணன் லீலை புரிந்துவிட்டானோ? இதில் விட்டேனா பார் என்று இல்லாமல், விட்டலா... விட்டலா வேறு!” என்று நொந்துகொள்வதுபோல் வெளியில் சொன்னாலும், மனதளவில் விட்டலா... விட்டலா... என்று ரசித்துச் சொல்லி மகிழ்வாள் வாசுகி.
காரணமே புரியாமல் அவளுடைய மனதையும் விட்டலா வென்றுவிட்டான் போல! விட்டலாவின் நாமத்தை விடாமல் சொல்லியபடியே வேலை செய்து வந்தாள்.
ஒருமுறை துக்காராம் வீட்டில் வாசுகி வறட்டி தயாரித்துக்கொண்டிருந்தாள். அவளுடன் அவளது தோழியும் தன் வீட்டுக்காக வறட்டி தயாரித்துக்கொண்டிருந்தாள். வாசுகி, “விட்டலா... விட்டலா...” என்றபடியே வறட்டி தட்டிக்கொண்டிருந்தாள். கைகள் இயந்திரமாக இயங்க, இயங்க... வாய் விட்டலாவின் நாமத்தை ஜெபிக்க, வேலையும் சுறுசுறுப்பாக நடந்தது.
இவளது வேகத்தைப் பார்த்து அவளது தோழிக்கோ இருப்புக்கொள்ளவில்லை. “எவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வறட்டியைத் தயாரித்துவிட்டாள்! நம் வேலை முடியவில்லையே” என்று மனதில் பொறாமை கொண்டாள்.
வாசுகி தட்டியிருந்த வறட்டிகளை எடுத்து, அவளது இடத்தில் வைத்துக்கொண்டாள்.
துக்காராம் வீட்டு பணிப்பெண்ணான வாசுகிக்கு, விட்டலாவே உடன் இருந்து வேலை செய்தது போன்ற மகிழ்ச்சி. “நான் முடித்துவிட்டேனடி!” என்றபடி தோழியிடம் திரும்பினாள்.
தோழியோ புன்னகையுடன், “நானும் முடித்துவிட்டேனடி!” என்றாள்.
அவளது இடம் முழுவதும் வறட்டிகள் நிரம்பி வழிந்தன.
வாசுகி தனது வறட்டிகளைப் பார்த்தாள். அங்கே குறைந்த எண்ணிக்கையில்தான் வறட்டிகள் இருந்தன.
“என்னடி... நான் அதிக வறட்டிகளைத் தயாரித்தேனே?” என்றாள் தோழியிடம்.
“ம்... நீ எங்கே தயாரித்தாய்? விட்டலா... விட்டலா... என்று வானத்தை நோக்கிச் சொல்லிக்கொண்டே இருந்தாய். வறட்டி என்ன வானத்திலிருந்து குதிக்குமா?” என்றாள் தோழி.
“இல்லை... நீதான் என்னுடைய வறட்டிகளைத் திருடியிருக்கிறாய். அதை ஒப்புக்கொள்ளாமல் வீணாக விட்டலா மேல் பழி போடுகிறாய்!” என்றாள் வாசுகி.
இருவருக்குள்ளும் வாதம் அதிகமாகியபோது, துக்காராம் அந்த வழியே வந்தார்.
இருவருமே துக்காராமிடம் தங்களது சந்தேகங்களைக் கூறினார்கள். தோழி, “உங்கள் வீட்டு பணிப்பெண் என்பதால் தாங்கள் அவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறக்கூடாது” என்ற நிபந்தனையுடன், அவரது கருத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தாள்.
“சரி” என்ற துக்காராம், வறட்டிகளை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். பின்னர் அவற்றை முகத்தின் அருகில் கொண்டு சென்றபோது, ஒரு வறட்டியிலிருந்து “விட்டலா!” என்ற சத்தம் கேட்டது.
அதன்பிறகு ஒவ்வொரு வறட்டியாகக் காதருகில் கொண்டு போனார். “விட்டலா!” என்ற சத்தம் கேட்ட வறட்டிகளை ஒரு புறமும், சத்தம் இல்லாத வறட்டிகளை மறுபுறமும் வைத்தார்.
பின்னர், “வறட்டி தட்டும்போது ‘விட்டலா’ என்று கூறியது யார்?” என்று கேட்டார்.
“நான்தான்” என்றாள் பணிப்பெண் வாசுகி.
“இதோ... இதுதான் உன்னுடைய வறட்டி. நீ ‘விட்டலா... விட்டலா...’ என்று சொல்லும்போது, நீ கூறிய திசையில் உள்ள காற்றிலெல்லாம் அந்த விட்டலா என்னும் வார்த்தை பரவியது. அப்படி இந்த வறட்டிக்குள்ளும் அந்தத் திருநாமம் பரவி, இப்போது எதிரொலிக்கிறது” என்றார் துக்காராம்.
பின்னர் அவளது தோழியைப் பார்த்து, “இப்போது சொல் பெண்ணே... நீதானே அவளுடைய வறட்டிகளைத் திருடினாய்?” என்றார்.
தோழி ஆமாம் என்பது போல் தலையாட்டினாள். “இனி இதுபோல் செய்ய மாட்டேன்” என்று மன்னிப்பு கோரினாள்.
வாசுகிக்கு மிகுந்த சந்தோஷம். “விட்டல்... விடாமல் உடன் இருந்தானே! இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்?” என்றபடி, மீண்டும் மீண்டும் “விட்டலா... விட்டலா...” என்று பாடியபடி துக்காராமுக்கு நன்றி சொன்னாள்.
வறட்டியில் “விட்டலா... விட்டலா...” என்ற நாமம் எதிரொலிக்குமா என்று கேட்கக்கூடாது. இது ஒரு புராணக் கதை.
ஆனால் விட்டலா என்றாலும்... பாண்டுரங்கா... பண்டரிநாதா என்றாலும்... கிருஷ்ணா என்றாலும்... சிவ சிவா என்றாலும்... ராமா... ராமா... என்றாலும், இறைவனின் திருநாமம்தான்.
இறைவனின் நாமத்தைச் சொல்ல நாக்கு தயங்குமா என்ன?
அதனால், என்ன வேலை செய்தாலும் இறைவனின் நாமத்தைச் சொல்லி தொடங்குங்கள். இறைவன் உடன் இருப்பான்.
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.








