pengal.

pengal.

Get In Touch

குழந்தையின்மை சிகிச்சை: IVF, ICSI பற்றி தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

குழந்தையின்மை சிகிச்சைக்காக செயற்கை முறை கருவுறுதலை நாடும் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்து இங்கு பகிர்கிறார் மகப்பேறு மற்றும் கருவுறுதல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அமுதா ஹரி, 
மகப்பேறியல், மகளிர் நோயியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவம் : மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல்

இன்றைய சூழலில் குழந்தையின்மை பிரச்னையை எதிர்கொள்ளும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு காரணங்களால்  கருவுறுதலில் பிரச்னை உருவாகலாம். சில நேரங்களில் இருவருக்குமே பிரச்னை இருக்கலாம். காரணத்தைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உண்டு. ஆனால் எந்த வகையான சிகிச்சையாக இருந்தாலும்  உடல், மனம், குடும்பம் மற்றும் பொருளாதாரம் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பயணமாக இவை இருப்பதால் இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

குழந்தையின்மைக்கான சிகிச்சையில், காரணத்தைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. இன்விட்ரோ என்னும் IVF (In-vitro fertilization) மற்றும் இக்ஸி ICSI (Intracytoplasmic Sperm Injection) ஆகும். இந்த இரண்டு சிகிச்சைகளும் பயனுள்ள என்றாலும் இதன் சிகிச்சைமுறையில் சிறிய வேறுபாடுகள் உண்டு


IVF (In Vitro Fertilisation) சிகிச்சை என்றால் என்ன?

மருந்துகள் மூலம் கருப்பையில் பல முட்டைகள் உருவாகத் தூண்டப்படும்.சிறிய மருத்துவ முறையின் மூலம் முட்டைகள் சேகரிக்கப்படும். ஆய்வகத்தில் முட்டையும் விந்தணுவும் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்படும். பிறகு உருவான கரு, கருப்பைக்குள் செலுத்தப்படும்.
 
ICSI- Intracytoplasmic sperm injection  சிகிச்சை என்றால் என்ன?
IVF போலவே மருந்துகள் மூலம் கருப்பைகள் தூண்டப்பட்டு, பல முட்டைகள் உருவாகச் செய்யப்படும். கருப்பையில் இருந்து முதிர்ந்த முட்டைகள் சேகரிக்கப்படும். விந்தணு நேரடியாக முதிர்ந்த முட்டைக்குள் நுண்ணிய ஊசி மூலம் செலுத்தப்பட்டு கரு உருவாக்கப்படும். கரு வளர்ந்த பிறகு, அது கருப்பைக்குள் செலுத்தப்படும். இது ICSI முறை சிகிச்சை. 

சிகிச்சையின் போது செய்ய வேண்டியவை
கணவன்–மனைவி இருவரும் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். என்னென்ன பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன, சிகிச்சை காலம், முடிவுகள் அதனுடன் சாத்தியமான பக்கவிளைவுகள் என்ன என அனைத்தையும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். 
சமச்சீர் உணவு, போதுமான தூக்கம், வழக்கமான உடல் செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.மன அழுத்தம் இல்லாமல் இருப்பது தம்பதி இருவருக்குமே அவசியம். 
சிகிச்சையின் போது மன அழுத்தம் அதிகமாக இருந்தால், குடும்பத்தினர் அல்லது நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவைப் பெறலாம். தேவைப்பட்டால் fertility counsellor அல்லது மனநல நிபுணரின் உதவியையும் பெறலாம்.  சிகிச்சைக்கு முன்பும் சிகிச்சை நடைபெறும் காலத்திலும் மருத்துவர் கூறும் மருந்துகள் மற்றும் பரிசோதனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். 

சிகிச்சையின் போது செய்யக் கூடாதது
பரிசோதனையில் ஒருவரிடம் ஏதேனும் பிரச்னை இருப்பது தெரியவந்தால், அதை வைத்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டக்கூடாது. 
இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெற வேண்டும்  என்ற ஒரே எதிர்பார்ப்புடன் இருப்பது சில நேரங்களில் சிகிச்சை கைக்கொடுக்காத போது தீவிர மன அழுத்தத்தில் கொண்டு சென்றுவிடும். முயற்சி பலனளிக்காதபோது, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டாமல் மருத்துவரிடம் ஆலோசித்து, ஏன் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை, அடுத்தகட்டத்தில் என்ன செய்யலாம் என்பதைக் கலந்துபேச வேண்டும். 

தம்பதியினரின் உறவு, பரஸ்பர ஆதரவு மற்றும் தெளிவான மருத்துவ ஆலோசனையுடன் எடுக்கப்படும் முடிவுகளே இந்தப் பயணத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.
pengal
Author

pengal