தூங்கி எழுந்ததும் காலையில் செய்ய வேண்டிய அன்றாடச் செயல்களில் மலம் கழிப்பதும் ஒன்று. உடலில் உள்ள கழிவுகள் சிரமமின்றி வெளியேறுவது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டைக் காட்டும். ஆனால், இன்று உலகம் முழுவதும் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகின்றனர்.
நாம் சாப்பிடும் உணவுகள் செரிமான மண்டலத்திற்குச் சென்று, சிறுகுடலில் உள்ள சத்துகளை உறிந்துக் கொள்கிறது. செரிமானத்திற்குப் பிறகு எஞ்சியிருக்கும் கழிவுகள் மலமாக வெளியேற்றப்படுகின்றன. இது உடலில் இயல்பாக நடைபெறும் அன்றாடச் செயல்முறையாகும்.
பொதுவாக, பலருக்கும் காலையில் மலம் கழிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் மலம் கழிப்பார்கள். இவ்வாறு மலம் கழிப்பதால் ஆரோக்கியக் குறைபாடு என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும் உணவுப் பழக்கத்திற்கும் ஏற்ப மலம் கழிக்கும் முறை மாறுபடலாம்.
முக்கியமாக, மலம் கழிக்கும்போது அதிக சிரமம், வலி அல்லது முக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது. மலம் மிகவும் வறண்டு கடினமாகி, அதிக முயற்சி செய்தும் வெளியேறாமல் இருந்தால் அது மலச்சிக்கலின் அறிகுறியாக இருக்கலாம்.
மலச்சிக்கல் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?
மலச்சிக்கல் தொடர்ந்து நீடிக்கும்போது சில உடல் உபாதைகள் ஏற்படலாம். குறிப்பாக, அடிவயிற்றில் வலி, வயிறு வீக்கம் மற்றும் மலம் முழுமையாக வெளியேறாத உணர்வு போன்றவை காணப்படலாம்.
சிலருக்கு மலம் சிறிது சிறிதாகப் பிரிந்து வெளியேறலாம். இன்னும் சிலருக்கு மலம் கழித்த பிறகும் மலக்குடலில் மலம் தேங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தும், அதைச் சரியாக வெளியேற்ற முடியாமல் அவதிப்படுவதும் மலச்சிக்கலுடன் தொடர்புடைய அறிகுறியாக இருக்கலாம்.
இத்தகைய பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் மட்டுமே இருப்பதில்லை. நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் உடல்நிலை எனப் பல காரணிகள் இதற்குக் காரணமாக அமைகிறது
1. நார்ச்சத்து குறைவான உணவுகள்:
அன்றாட உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாமல் இருப்பது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும் குடல் இயக்கத்தைப் பாதிக்கலாம்.
2. உடல் உழைப்பின்மை:
உடல் செயல்பாடுகள் குறைந்து, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம் இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.
3. போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது:
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்காமல் போனால் மலம் வறண்டு கடினமாக மாறலாம். இதனால் மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படக்கூடும்.
4. மன அழுத்தம்:
அதிகப்படியான மன அழுத்தமும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.
5. அதிக உடல் எடை:
உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் குடல் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
6. புகைப்பழக்கம்:
புகைப்பழக்கம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மேலும், புகைப்பழக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை காரணிகளும் செரிமானப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
7. தூக்கமின்மை:
இரவு நேரங்களில் நீண்ட நேரம் விழித்திருப்பது, போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்களும் உடலின் இயல்பான செயல்பாடுகளைப் பாதிக்கலாம். இதனால் சிலருக்கு மலம் கழிக்கும் பழக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
மலச்சிக்கல் பிரச்சினையை அலட்சியப்படுத்தாதீர்கள்!
மலம் கழிக்கும்போது சிரமம், வலி, அதிகமாக முக்க வேண்டிய நிலை அல்லது முழுமையாக மலம் வெளியேறாத உணர்வு இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத் தானியங்களைச் சேர்த்துக்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
காலையில் எழுந்ததும் மலம் கழிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. உடலின் இயல்பான தேவையை உணர்ந்து, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது அதைத் தாமதப்படுத்தாமல் செல்வது நல்லது.
மலச்சிக்கல் தொடர்ந்து நீடித்தாலோ, மலத்தில் ரத்தம் வந்தாலோ, கடுமையான வயிற்றுவலி அல்லது திடீர் உடல் எடை குறைவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்துங்கள்.
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.






