சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் கே.என்.நேரு பேசும்போது ரேஷன் அரிசி ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் என்று கூறியிருந்தார். தற்போது இது குறித்து மக்களிடையே விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் உண்மையில் ரேஷன் அரிசி ரத்த சர்க்கரையைக் குறைக்குமா என்று Founder & Consultant Dietitian Parimala Devi KumaraSwamy, Parims Nutrition, Coimbatore அவரிடம் கேட்டிருந்தோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.
ரேஷன் அரிசி சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா?
இல்லை. ரேஷன் அரிசி சாப்பிடுவதால் மட்டும் இரத்தச் சர்க்கரை குறையும் என்று சொல்ல முடியாது.
ரேஷன் அரிசி என்பது ஒரு தனி அரிசி வகை அல்ல. அதன் ஊட்டச்சத்து மதிப்பு, அரிசியின் வகை, அரிசி பாலீஷ் செய்த விதம், அளவு மற்றும் அது வேகவைத்ததா அல்லது வேகவைக்காத நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டதா என்பதன் அடிப்படையில் மாறுபடும்.
இந்திய அரிசி வகைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி அரிசியை பாலீஷ் செய்வதன் அளவு அதிகரிக்கும்போது அதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் சில மைக்ரோநியூட்ரிஷியன்கள் குறையலாம் என்பதை காட்டுகின்றன.

ஒரு குறிப்பிட்ட ரேஷன் அரிசி குறைவாக பாலீஷ் செய்யப்பட்டதாகவோ அல்லது புழுங்கல் அரிசியாகவோ இருந்தால், அதிகமாக பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியை விட சில ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் அரிசி பாலீஷ் அதிகமில்லை சற்றே மங்கலான நிறத்தில் தான் இருக்கிறது என்று நன்மைதரும் அரிசி ரகங்களில் அதை சேர்த்துவிடக்கூடாது. மேலும் அதில் நார்ச்ச்த்து அல்லது ஊட்டச்சத்து அதிகம் என்று முடிவு செய்துவிடவும் கூடாது. குறிப்பிட்ட ரேஷன் அரிசியின் ஊட்டச்சத்து மேன்மைகளைப் பற்றி உறுதியாகக் கூற அதன் ஆய்வக பகுப்பாய்வும் தேவை. அப்படியே ரேஷன் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருந்தால் மற்ற விஷயங்களிலும் கவனமாக இருந்தால் தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் முக்கியமானது அரிசி மட்டும் அல்ல. நன்மையே செய்யக்கூடிய உணவு என்றாலும் அது அளவோடு இருக்க வேண்டும்.
சர்க்கரை கட்டுப்பாட்டில் முக்கியமானது அரிசியின் பெயர் மட்டும் அல்ல. தினமும் எத்தனை வேளை அரிசி சோறு சாப்பிடுகிறோம். எவ்வளவு அரிசி சாப்பிடுகிறோம். அதனுடன் எவ்வளவு காய்கறிகள் சாப்பிடுகிறோம். என்ன மாதிரியான காய்கறிகளை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம். அதனுடன் பருப்பு/ புரதம் சரியான எடையில் சேர்த்திருக்கிறோமா? உணவுக்குப் பிறகு உடல் இயக்கம் போதுமான அளவு உள்ளதா, மொத்த உணவாக எவ்வளவு சாப்பிடுகிறோம் இப்படி பல விஷயங்களை உள்ளடக்கியதுதான் நீரிழிவு நிர்வகிப்பு. உடல் மட்டும் அல்லாமல் மன ஆரோக்கியமும் இதில் அடக்கம்.
அதனால் ரேஷன் அரிசி சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை அளவை குறைத்துவிடும் என்று பொதுவாக சொல்லிவிடமுடியாது. மேலும் நெல் வேகவைக்கப்பட்ட புழுங்கல் அரிசி என்பதால் அவற்றில் சில ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கலாம். எனினும் இதனாலேயே இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்று சொல்லிவிடமுடியாது.










