pengal.

pengal.

Get In Touch

நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் 5 எளிய சுவாசப் பயிற்சிகள்!

சுவாசிப்பதற்கு உதவும் முக்கிய உறுப்பு நுரையீரல். நாம் உள்ளிழுக்கும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து ரத்தத்தில் கலக்கச் செய்து, உடலில் உருவாகும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவது நுரையீரலின் முக்கியப் பணிகளாகும்.

நுரையீரல் சரியாகச் செயல்பட்டால்தான் உடலின் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். எனவே, நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்கு சுவாசப் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் உதவக்கூடும்.

நுரையீரலின் செயல்பாடு மற்றும் சுவாசத் திறன் பாதிக்க காரணங்கள்

  • வயது அதிகரித்தல்: வயதாகும்போது நுரையீரலின் செயல்பாட்டில் இயற்கையான மாற்றங்கள் ஏற்படலாம்.

  • உடல் உழைப்பு இல்லாமை: உடல் இயக்கம் குறைவாக இருப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சுவாசத் திறனையும் பாதிக்கலாம்.

  • புகைப்பழக்கம்: தொடர்ந்து புகைபிடிப்பது நுரையீரலைப் பாதிக்கும் முக்கியமான காரணமாகும்.

  • ஆஸ்துமா: இந்தப் பாதிப்பு சுவாசப் பாதைகளைச் சுருக்கி மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

  • அதிக உடல் எடை: அதிக உடல் எடை சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.

நுரையீரலை ஆரோக்யமாக  வைத்துகொள்ள  உதவும் 5 முக்கிய பயிற்சிகள்

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி!

முதலில் நேராக  உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து பிறகு சில விநாடிகள் நிறுத்தி, பிறகு மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். அப்போது வயிறு சுருங்கி  விரிவதை உணரலாம். 

இதை 10 முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி சுவாசத்தை சீராக்குவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

வாய் வழியாக மூச்சு விடுதல்

உதடுகளைக் குவித்து மூச்சை வெளியே விடும் பயிற்சி சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது. குறிப்பாக, மூச்சை வெளியே விடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கலாம்.

இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முதலில் மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

பின்னர் மெழுகுவர்த்தியை ஊதுவது போன்று உதடுகளைக் குவித்துக் கொள்ள வேண்டும். இப்போது குவித்த உதடுகளின் வழியாக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும்.

மூச்சை உள்ளிழுப்பதைவிட மெதுவாக வெளியே விடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பயிற்சி செய்வது சுவாசத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

நாசிப்பயிற்சி

யோகாவில் நாடி சுத்தி பிராணாயாமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு முதலில் முதுகை நேராக வைத்துக் கொண்டு அமர வேண்டும்.

  • வலது கை கட்டைவிரலால் வலது மூக்குத் துவாரத்தை மூட வேண்டும்.

  • இப்போது இடது மூக்குத் துவாரம் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

  • பின்னர் மோதிர விரலால் இடது மூக்குத் துவாரத்தை மூட வேண்டும்.

  • வலது மூக்குத் துவாரத்தைத் திறந்து அதன் வழியாக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும்.

  • அடுத்து வலது மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுத்து, இடது மூக்குத் துவாரம் வழியாக வெளியே விடலாம்.

இவ்வாறு இரண்டு மூக்குத் துவாரங்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். மூச்சை வலுக்கட்டாயமாக  இழுக்க கூடாது.

ரிப் ஸ்ட்ரெச் பயிற்சி

விலா எலும்புப் பகுதியை விரிவடையச் செய்வதால் இது மார்புப் பகுதியின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதை செய்வதற்கு முதலில் நேராக நிமிர்ந்து நின்று, இரண்டு கைகளையும் இடுப்பின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மெதுவாக ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது மார்புப் பகுதி விரிவடைவதை உணரலாம்.

பிறகு மூச்சை இயல்பாகவும் மெதுவாகவும் வெளியே விட வேண்டும். இதை 5-10 முறை செய்யலாம். 

மூச்சை நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக அடக்கி வைக்க வேண்டாம். உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்த வேண்டும்.

புகைபழக்கம் வேண்டாம்

நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்று புகைப்பழக்கம். தொடர்ந்து புகைபிடிப்பதால் நுரையீரலில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதுடன் சுவாசப் பாதைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

நீண்ட காலமாகப் புகைபிடிப்பவர்களுக்கு நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

மேலும், தொடர்ந்து சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு: சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது. ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது வேறு நுரையீரல் பாதிப்புகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.


pengal
Author

pengal