pengal.

pengal.

Get In Touch

உலக போலியோ தினம்: 2026 போலியோ முற்றிலும் ஒழிந்துவிட்டதா?

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24-ம் தேதி உலக போலியோ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. போலியோ நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். தடுப்பூசி திட்டங்களால் உலகளவில் போலியோ பாதிப்பு பெருமளவு குறைந்திருந்தாலும், இந்த நோயை முழுமையாக ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2026 போலியோ தினத்தின் கருப்பொருள்

2026-ம் ஆண்டின் உலக போலியோ தினக் கருப்பொருள், ‘ஒரே நாள்... ஒரே இலக்கு: போலியோவை ஒழிப்போம்!’ (One Day. One Focus: Ending Polio) என்பதாகும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துதல், நோய் பரவலைக் கண்காணித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் .

போலியோ என்றால் என்ன?

போலியோ (Polio) அல்லது போலியோமைலிடிஸ் என்பது போலியோ வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்து குடலில் பெருகுகிறது. சிலருக்கு எந்த அறிகுறியும் ஏற்படாமல் இருக்கலாம். மற்றவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, தொண்டை வலி போன்ற லேசான அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு வைரஸ் நரம்பு மண்டலத்தைப் பாதித்து நிரந்தர முடக்குவாதத்தை ஏற்படுத்தலாம்.

போலியோ பாதிப்பு அறிகுறிகள் 
போலியோ பாதிப்பு ஏற்பட்ட அனைவருக்கும் அறிகுறிகள் தெரிவதில்லை. அறிகுறிகள் லேசானதாகவோ, தீவிரமானதாகவோ இருக்கலாம்.
  • காய்ச்சல்
  • உடல் சோர்வு மற்றும் தலைவலி
  • தொண்டை வலி
  • குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுவலி
  • கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் இறுக்கம்
  • கை, கால்களில் வலி அல்லது பலவீனம்
  • தசை பலவீனம் மற்றும் முடக்குவாதம்
தீவிரமான பாதிப்பு ஏற்பட்டால் சுவாசிக்கவும், விழுங்கவும் உதவும் தசைகள் பாதிக்கப்படலாம். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

போலியோ ஏன் வருகிறது?

போலியோ வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. முக்கியமாக, வைரஸ் கலந்த மலம் மூலம் மாசடைந்த தண்ணீர், உணவு ஆகியவற்றின் வழியாகப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சுவாச சுரப்புகள் மூலமும் பரவலாம்.

போலியோ பரவுவதற்கான முக்கிய காரணங்கள்:
  • கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவாமல் இருப்பது.
  • மாசடைந்த தண்ணீரைக் குடிப்பது. மாசடைந்த தண்ணீரில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது.
  • வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வது.
  • போலியோ தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது.
போலியோ வந்தால் என்ன ஆகும்? 

பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் ஏற்படுவதில்லை அல்லது லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு முடிவடைகிறது. சிலருக்கு வைரஸ் மூளை மற்றும் தண்டுவடத்தைப் பாதிக்கலாம். இதனால் கை, கால்களில் நிரந்தர முடக்குவாதம் ஏற்படலாம். அரிதான சில பாதிப்புகளில் சுவாசத் தசைகள் செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும், போலியோவிலிருந்து மீண்ட சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தசைப் பலவீனம், வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இது ‘போஸ்ட் போலியோ சிண்ட்ரோம்’ (Post-polio syndrome) எனப்படுகிறது.

போலியோ தடுக்க என்ன செய்வது?

போலியோவைக் குணப்படுத்துவதற்கான குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை என்பதால், தடுப்பூசி மூலமே தடுக்க முடியும்.
குழந்தைகளுக்குத் தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி போலியோ தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்த வேண்டும்.
அரசு நடத்தும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தகுதியுள்ள குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், குழந்தைகளின் டயப்பர்களை மாற்றிய பிறகும் கைகளை சோப்பால் நன்றாகக் கழுவ வேண்டும்.
சுத்தமான குடிநீரைப் பயன்படுத்த வேண்டும்.

உணவுகளைச் சுத்தமாகத் தயாரித்து, பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும்.
தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர் அல்லது சுகாதாரப் பணியாளர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் போலியோ பாதிப்பு பெருமளவு குறைந்திருந்தாலும், சில பகுதிகளில் வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. எனவே, தடுப்பூசி திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதும், குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பூசிப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான போலியோ தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தி, சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் போலியோ இல்லாத எதிர்காலத்தை உருவாக்க உதவலாம்.
pengal
Author

pengal